“வாசிப்பு மனிதனை பூரணப்படுத்துகின்றது” என்பது பல அறிஞர்கள் அது கருத்தாகும். இதற்க்கமைவாக ஒவ்வொருவரும் தன்னுடைய மொழி திறன்களையும், அறிவையும் வளர்த்துக் கொள்வதற்கு இந்த வாசிப்பு இன்றியமையாததாகவே காணப்படுகின்றது.
வாசிப்பும் மொழி அறிவும் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- வாசிப்பின் மகத்துவம்
- வாசிப்பு தரும் மொழி அறிவு
- வாசிப்பின் பயன்கள்
- மனிதனை பூரணப்படுத்தும் ஆயுதம் வாசிப்பு
- முடிவுரை
முன்னுரை
“ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்” என்ற பாரதியாரின் கருத்தானது வாசிப்பினை ஊக்குவிப்பதாகவே காணப்படுகின்றது. அதாவது இந்த உலகில் தலைசிறந்த மாமனிதர்களாக விளங்கிய அனைவருமே வாசிப்பின் மூலம் உயர்வினை அடைந்தவர்களாகவே காணப்படுகின்றனர்.
ஆனால் தற்காலங்களில் உயர் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக இந்த புத்தக வாசிப்பு என்பது மந்தமான ஒரு நிலைக்கு, இட்டுச் செல்லப்பட்டிருப்பதனைக் நாம் காண முடிகின்றது.
வாசிப்பு பழக்கத்தை மீளவும் கட்டி எழுப்புவதன் ஊடாக சிறந்ததொரு சந்ததியினரை உருவாக்க உதவும்.
வாசிப்பின் மகத்துவம்
“நூல் அறிவு ஆகுமாம் நுண்ணறிவு” என்ற ஔவையாரின் கருத்துக்கு அமைவாக ஒரு மனிதன் தன்னுடைய ஆயுட்காலத்துக்குள் எவ்வளவு அதிகமான, நல்ல அறிவார்ந்த நூல்களை கற்றுக் கொள்கிறானோ, அந்த அளவுக்கு அவனுடைய அறிவாற்றல் அதிகரிக்கும் என குறிப்பிடப்படுகின்றது.
மேலும் வாசிப்பு என்பது வெறுமனே புத்தக அறிவை மாத்திரம் தருவது அன்றி, மொழிவிருத்தி, அறிவு விருத்தி என்பவற்றோடு இணைத்து சிந்தித்து செயல்படும் தன்மை, நிதானம் ஆகியவற்றையும் வளர்ப்பதற்கு உதவுவதாகவே அமையும்.
வாசிப்பு தரும் மொழி அறிவு
மனிதனுக்கு மிகச் சிறந்ததொரு பொழுதுபோக்காகவும், மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவதற்கான நிவாரணியாகவும் அமைவதாகவே இந்த வாசிப்பு காணப்படுகின்றது.
ஒரு மொழியினைப் பற்றி அறிந்து கொள்வதற்கு அந்த மொழியில் எழுதப்பட்டுள்ள புத்தகங்களை அதிகமாக வாசிப்பதன் மூலமே குறித்த மொழி அறிவு விருத்தி பெறும்.
அதாவது தமிழ் மொழியில் எழுதப்பட்ட புத்தகங்களை அதிகமாக வாசிக்கும் பொழுது தான் தமிழ் மொழியின் இலக்கியச் சிறப்பையும், தொன்மையையும், வரலாற்றுப் புகழையும் விளங்கிக் கொள்ள முடிவதோடு, தமிழ் மொழியை இலக்கண பிழையின்றி எழுதவும், உச்சரிக்கவும் முடியும்.
வாசிப்பின் பயன்கள்
வாசிப்பானது மனிதரிடத்தே பல்வேறு நன்மைகளை தந்து விடுகின்றது. இந்த வகையில் ஒருவர் அதிகமாக வாசிப்பதன் மூலம் ஆக்கபூர்வமான பேச்சாற்றலையும், பிரச்சினைகளை சமாளிக்க கூடிய அனுபவங்களையும், அறிவாற்றலையும் வழங்குவதோடு மொழித்திறன், சிறந்த எழுத்தாற்றல் போன்றன கிடைக்கின்றன.
மேலும் புதுமையான பல விடயங்களையும், தொன்மையான விடயங்களையும் அறிந்து கொள்ள உதவுவதோடு வாழ்வின் தாத்பரியங்களை அறிந்து கொள்வதற்கும் இந்த புத்தக வாசிப்பு பயன்படுவதாக காணப்படுகின்றது.
மனிதனை பூரணப்படுத்தும் ஆயுதம் வாசிப்பு
ஒரு மனிதன் பல்வேறு குணங்களால் சூழப்பட்டவனாகவே காணப்படுகின்றான். அவற்றுள் நல்ல குணங்கள், தீய குணங்கள் ஆகிய இரண்டும் காணப்படுகின்றன.
இங்கு மனிதனிடம் காணப்படக்கூடிய பொறாமை, போட்டி, வஞ்சகம், மூடநம்பிக்கைகள், தீய எண்ணங்கள் போன்றவற்றிலிருந்து மனிதனை விளக்கி நன்மை தரக்கூடிய நல்ல குணங்களின் பால் இட்டுச் செல்லக் கூடியது புத்தக வாசிப்பாகும்.
இதனால் தான் வாசிப்பு மனிதனை பூரணப்படுத்துகின்றது என்ற கருத்து வலுப்பெறுகின்றது. எனவே நல்ல புத்தகங்களை வாசித்து அதன்படி ஒழுகக் கூடியவர்கள் சிறந்தவர்களாகவே இருக்க முடியும்.
முடிவுரை
சிறந்த ஒரு புத்தகம் சிறந்ததொரு நண்பன் என கூறப்படுகின்றது. அதாவது சிறந்த நண்பன் எவ்வாறு எம்மை வழிப்படுத்துவானோ, அது போலவே சிறந்த புத்தகங்களும் எம்மை சிறந்த வழியில் நெறிப்படுத்தும் என்பதே இதன் கருத்தாகும்.
ஆனால் இன்றைய காலகட்டங்களை பொறுத்த அளவில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியானது பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது.
இதன் விளைவாக இன்றைய சமூகங்களின் மத்தியில் புத்தக வாசிப்பானது மிகவும் அரிகியே காணப்படுகின்றன. இதனாலே சமூகத்தில் மொழி அறிவு மந்தநிலையில் காணப்படுகின்றது. எனவே புத்தக வாசிப்பை ஊக்குவிப்பது அவசியமானதாகும்.
You May Also Like: