ஒரு நாட்டை ஆளும் அதிகாரம் என்பது மிகவும் வலிமையான மற்றும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். எனவே அதனை தீர்மானிக்கும் வாக்கினை சரியான முறையில் பயன்படுத்துவது அவசியம் ஆகும்.
இந்த வாக்குரிமை என்பது ஒவ்வொரு நாட்டு குடிமக்களினதும் அதிகாரத்தினை தீர்மானிக்கும் ஆற்றல் கொண்டதாகும். ஒவ்வொரு வாக்கும் மிகவும் பெறுமதியானதாகும். எனவே அனைவரும் சிந்தித்து நேர்மையான முறையில் எமது வாக்கினை அழிப்பது அவசியமானதாகும்.
எனது வாக்கு எனது உரிமை கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- வாக்குரிமை என்றால் என்ன
- வாக்கினுடைய அவசியம்
- வாக்குரிமை அடிப்படை உரிமையாகும்
- ஜனநாயகமும் வாக்குரிமையும்
- முடிவுரை
முன்னுரை
ஒவ்வொரு ஜனநாயக நாட்டிலும் வாக்குரிமை என்பது மிகவும் சக்தி பொருந்திய ஒரு சாவியாகவே காணப்படுகின்றது. ஒவ்வொரு பிரஜையையும் தன்னுடைய விருப்பு, வெறுப்புகளை இந்த வாக்கின் மூலமே தெரிவித்து அந்த நாட்டினுடைய தலைவிதியை மாற்றி அமைக்கின்றனர்.
வாக்குரிமை என்பது யாருடைய அதிகாரங்களாலோ, அல்லது அழுத்தங்களாலோ கட்டுப்படுத்தப்பட முடியாத தன்னிச்சையாக முடிவெடுக்கக் கூடிய ஓர் அதிகாரமாகும்.
வாக்குரிமை என்றால் என்ன
இந்தியாவில் பிரித்தானியருடைய காலனித்துவ ஆட்சியில் மன்னர் ஆட்சி முறைகள் ஒழிக்கப்பட்டு, தேர்தல்கள் மூலம் ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்கும் முறை நடைமுறையில் கொண்டுவரப்பட்டது.
அப்போது அதிகாரத்தில் இருக்கும் ஆண்களுக்கு மாத்திரமே இந்த ஆட்சியாளர்களை தெரிவு செய்யும் வாக்குரிமை என்பது வழங்கப்பட்டது.
பிற்பட்ட காலத்தில் இந்தியாவினுடைய அரசியல் அமைப்பு திட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் ஆகிய இருபாலரும் வாக்களிக்கலாம், என்ற சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதுவே இன்றுவரையிலும் நடைமுறையிலும் பேணப்பட்டு வருகின்றது.
வாக்கினுடைய அவசியம்
தற்காலங்களில் நாட்டினுடைய ஆட்சியாளர்கள் மக்களின் வாக்குகளின் மூலமே தீர்மானிக்கப்படுகின்றனர்.
எனவே பெரும்பான்மையோரது ஆதரவை பெறுகின்றவர் தான் நாட்டின் ஆட்சியாளனாக வர முடியும், எனவே ஒவ்வொரு பிரஜையும் தன்னுடைய வாக்கு மிகவும் பெருமதியானவை என்பதனை மனதினில் கொண்டு சிந்தித்து தனது வாக்கை வீண்விரயம் செய்யாமல் சரியான முறையில் சரியான நபருக்கு அளிக்க வேண்டும்.
எமது ஒவ்வொரு வாக்கும் சிறந்ததொரு தலைவரை தீர்மானிப்பதில் செல்வாக்கு செலுத்துவதாகவே காணப்படும். எனவே எமது வாக்குகளை வீண் விரயம் செய்யாமல் சரியான முறையில் உபயோகிப்பது எமது கடமையாகும்.
வாக்குரிமை அடிப்படை உரிமையாகும்
இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்னர் வசதி படைத்த மத்திய தர வர்க்கத்தை சேர்ந்த ஆண்களுக்கு மட்டுமே வாக்குரிமை வழங்கப்பட்டது.
இந்த நடைமுறையை உடைத்து 18 வயதுக்கு மேற்பட்ட ஆண் பெண் இருபாலாருக்கும் வாக்குரிமை வழங்கப்பட வேண்டும் என இந்தியாவின் புதிய அரசியலமைப்பு திட்டத்தை அறிமுகம் செய்தவராக டாக்டர் அம்பேத்கர் காணப்படுகின்றார்.
இதன்படியே இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் வாக்குரிமை என்பது அடிப்படை உரிமையாகவே வழங்கப்பட்டுள்ளது. அதனால் தான் உலகில் ஜனநாயக நாடுகளின் வரிசையில் இந்தியாவும் காணப்படுகின்றது.
ஜனநாயகமும் வாக்குரிமையும்
மக்களினால் மக்களுக்காக நடாத்தப்படும் ஆட்சியே ஜனநாயகம் எனப்படுகின்றது. அதாவது இங்கு மக்கள் தங்களுக்குத் தேவையான ஆட்சியாளரை தங்களுடைய வாக்குரிமையின் மூலம் தெரிவு செய்து கொள்கின்றனர்.
இவ்வாறாக மக்கள் தான் தெரிவு செய்த தலைவர்களை கேள்வி கேட்பதற்கான உரிமையையும் பெற்றுள்ளனர்.
அப்போது தான் சரியான தலைவர்களை தெரிவு செய்து அதன் மூலம் லஞ்சம், ஊழல் போன்றவற்றை குறைவடையச் செய்து, நாட்டையும் வளர்ச்சி அடைய செய்ய முடியும். ஆகவே ஒரு நாட்டின் சிறந்த எதிர்காலத்துக்கு ஜனநாயகமும், வாக்குரிமையும் அவசியமானதாகும்.
முடிவுரை
தற்காலங்களில் குறிப்பாகவே இளைஞர் சமூகம் அதிகமாக அரசியலில் ஈடுபாடு காட்டுவதில்லை. இதன் காரணமாகத்தான் பல தவறான அரசியல் சக்திகள் மக்களை ஏமாற்றி தமது நலன்களை அடைந்து கொண்டு, நாட்டையும், நாட்டு மக்களையும் பின்தங்கிய நிலையிலேயே வைத்திருக்கின்றனர்.
நாம் அனைவரும் சேர்ந்து ஒரு ஆளுமை மிக்க தலைவனை தெரிவு செய்யும்போதே உலக அரங்கில் நம் இந்திய நாடு வலுப்பெற்ற நாடாக மாற்றம் பெறும் என்பதில் ஐயமில்லை.
You May Also Like: