மக்கள் தொகை எனப்படுவது ஒரு நாட்டில் வாழக்கூடிய ஒட்டுமொத்த மக்களின் எண்ணிக்கையை குறிப்பதாகும். தற்காலங்களில் நாடுகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் மிகவும் முக்கியமான ஒரு பிரச்சினையாகவே மக்கள் தொகை பெருக்கமும் காணப்படுகின்றது.
மக்கள் தொகை பெருக்கம் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- மக்கள் தொகை பெருக்கத்திற்கான காரணிகள்
- சுற்றுச்சூழல் சீர்கேடுகள்
- பொருளாதார நெருக்கடி
- மக்கள் தொகை பெருக்கத்தினை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
- முடிவுரை
முன்னுரை
நாம் வாழும் சமூகங்களில் நிகழக்கூடிய ஒரு சமூக நிகழ்வாகவே இந்த மக்கள் தொகை பெருக்கம் காணப்படுகின்றது. அதாவது நாடுகளில் காணப்படும் வளங்களை அனுபவிக்கும் மக்கள் தொகையினை விட அதிகமாக மக்கள் தொகை பெருகுதலையே இது குறிக்கின்றது.
தற்காலங்களில் நாடுகள் எதிர்கொள்ளும் சவாலாக இது காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக இந்தியா மக்கள் தொகை பெருக்கத்துக்கு உள்ளாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
மக்கள் தொகை பெருக்கத்திற்கான காரணிகள்
ஒரு நாட்டில் மக்கள் தொகை பெருக்கம் அதிகமாகினறது என்றால் அந்நாட்டில் வளப்பற்றாக்குறை ஏற்படும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
இதன்படி மருத்துவ தொழில்நுட்பத்தினால் மனிதர்களின் இறப்பு வீதம் குறைந்தமை, பிறப்பு வீதத்தில் எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாமல் போனமை, மத ரீதியாக குழந்தை கட்டுப்பாடுகள் தவறானவை என்ற கருத்து நிலவியமை, இளம் வயது திருமணங்கள் அதிகரித்தமை, கல்வி அறிவு குறைவாக காணப்படுகின்றமை போன்ற பல காரணிகள் இன்றைய சமூகங்களில் மக்கள் தொகை பெருக்கத்துக்கான காரணிகளாக அமைகின்றன.
சுற்றுச்சூழல் சீர்கேடுகள்
தற்காலங்களில் மக்கள் தொகை பெருக்கத்தினால் ஏற்படும் விளைவுகளுள் மிகவும் முக்கியமான ஒன்றாகவே சுற்றுச்சூழல் சீர்கேடுகள் அமைகின்றன.
அந்த வகையில் நாடுகளில் மக்கள் தொகை பெருக்கத்தினால் ஏற்படும் வேலையில்லாத பிரச்சினைகளை நிவர்த்தி செய்யும் வகையில் இன்று அரசாங்கங்களும், தனியார் நிறுவனங்களும் பல்வேறு தொழிற்சாலைகளை நிறுவி மக்களை வேலைக்கு அமர்த்துகின்றன.
இவ்வாறான தொழிற்சாலைகளின் உருவாக்கத்தினால் இன்று நீர், காற்று, ஆகாயம், நிலம் சார் சுற்றுச்சூழல் மாசுகள் ஏற்படுகின்றன. உதாரணமாக ஓசோன் படை சிதைவடைவதனை குறிப்பிடலாம். இன்னும் புவி வெப்பமடைதலுக்கு மிக முக்கிய காரணமும் மக்கள் தொகை பெருக்கமாகும்.
பொருளாதார நெருக்கடி
துரிதமாக மக்கள் தொகை பெருகுவதனால் நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்படுகின்றது. அந்த வகையில் உணவு பற்றாக்குறை, தலா வருமானம் மற்றும் நாட்டு வருமானம் குறைதல், சேமிப்பும் முதலீடும் குறைதல், மூலதன ஆக்கம் குறைவடைதல், உற்பத்தித்திறன் குறைவடைதல், வேலையின்மை, அரசின் நிதிச்சுமை அதிகரித்தல் போன்ற காரணிகள் நாட்டில் பொருளாதார நெருக்கடியினை வலுவூட்டுவதனை காணலாம்.
இந்த வகையில் மக்கள் தொகையின் பெருக்கமானது பொருளாதாரத்தை மிகவும் மோசமான அளவு பாதிக்கும் என்பதனை புரிந்து கொள்ள முடிகின்றது.
மக்கள் தொகை பெருக்கத்தினை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
ஒரு நாட்டினை பாரிய சவாலுக்கு உட்படுத்தும் ஓர் பிரச்சினையாகவே அதிக மக்கள் தொகை பெருக்கம் காணப்படுகின்றது. எனவே மக்கள் தொகை பெருக்கத்தினை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளாக பின்வருவனவற்றை குறிப்பிடலாம்.
அந்த வகையில் பெண்களின் எழுத்தறிவு வீதத்தை அதிகரிக்கச் செய்வதோடு பெண்களுக்கு கல்வியூட்டுதல், இளவயது, குழந்தை திருமணங்களுக்கு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்தல், ஏக காலத்தில் ஒருவர் பல திருமணங்கள் செய்வதனை தடை செய்தல், குடும்ப நல திட்டங்களை அறிமுகம் செய்தல், குடும்பக் கட்டுப்பாடுகள் தொடர்பான விழிப்புணர்வுகளை சமூகத்துக்கு வழங்குதல்.
இவ்வாறான செயற்பாடுகளின் மூலம் அதிமக்கள் தொகையை பெருக்கத்தினை கட்டுப்படுத்த முடியும்.
முடிவுரை
நாம் வாழும் உலகம் இன்று பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தொழில் நுட்ப யுகத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த வகையில் நவீன யுகத்தில் காணப்படக்கூடிய ஓர் பாரிய பிரச்சினையாகவே அதிக மக்கள் தொகை பெருக்கமும் காணப்படுகின்றது.
எனவே அதிக மக்கள் தொகை பெருக்கத்தினால் ஏற்படும் விளைவுகளை நாம் அறிந்து கொண்டு இவ்வாறான விளைவுகள் நாம் வாழும் சமூகங்களின் மத்தியில் ஏற்படாத வகையில் பாதுகாப்பது எம் ஒவ்வொருவரதும் கடமையாகும்.
You May Also Like: