மாணவர்களின் கடமை வெறுமனே புத்தகக் கல்வியை மாத்திரம் பெற்றுக் கொள்வது அல்ல, ஒழுக்கத்தோடு கூடிய நற்பண்புகளை கற்றுக் கொள்வதும் அவர்களுடைய கட்டாய கடமையாகும்.
எனவே கல்வி நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகள் என்பன மாணவர்களது ஒழுக்கம் சார் செயல்பாடுகளில் அதிக ஈடுபாடு காட்ட வேண்டும் என்பது மிகவும் முதன்மையானதாகவும்.
மாணவர் ஒழுக்கம் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- ஒழுக்கத்திற்கான அடிப்படை
- ஒழுக்கத்தின் சிறப்பு
- மாணவர்களது ஒழுக்கம்
- தற்கால மாணவர்களின் நிலை
- முடிவுரை
முன்னுரை
“ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்” என்கின்றார் திருவள்ளுவர். எனவே ஒழுக்கம் என்பது வாழ்வின் அடிப்படை அங்கமாகவே காணப்படுகின்றது. இந்த ஒழுக்கத்தினை மாணவ பருவத்திலேயே கற்றுக்கொள்ள வேண்டும்.
அதாவது கல்வியோடு இணைத்து சிறந்த ஒழுக்கத்தையும் கற்றுக் கொள்ளும் மாணவர்களே பிற்காலத்தில் சிறந்த நிலையில் செழிப்புற்று வாழ்வதனைக் காணலாம். எனவே மாணவர் ஒழுக்கம் தொடர்பாக அறிந்து கொள்வது அவசியமானதாகும்.
ஒழுக்கத்திற்கான அடிப்படை
நாம் வாழக்கூடிய சமூகங்களில் வாழ்ந்து மரணித்த எமது முன்னோர்கள் ஒழுக்கத்திற்கான அடிப்படைகளை எமக்கு காட்டித் தந்துள்ளனர். இந்த வகையில் நன்னெறி முறைகளை கடைப்பிடித்து ஒழுகுதலே ஒழுக்கம் என கொள்ளப்படுகின்றது.
அந்த வகையில் அடக்கம், பணிவு, பண்பு, இன்சொல் பேசுதல், பெரியோரை மதித்தல், பிறருக்கு உதவி புரிதல், உண்மை பேசுதல், மரியாதையை கடைப்பிடித்தல் மற்றும் தீய பழக்க வழக்கங்களில் இருந்து விடுபட்டிருத்தல் போன்றவாரான செயற்பாடுகளே ஒழுக்கத்தின் வெளிப்பாடுகள் ஆகும் என ஒழுக்கத்திற்கான அடிப்படைகளை எமது முன்னோர்கள் வகுத்து தந்துள்ளனர்.
ஒழுக்கத்தின் சிறப்பு
ஒரு மனிதனுக்கு உயர்வைத் தரக்கூடியது ஒழுக்கமாகும். அதாவது ஒருவர் எதை இழந்தாலும் ஒழுக்கத்தை இழத்தல் கூடாது. ஏனெனில் ஒழுக்கம் உடையவர் சிறப்புடையவராகின்றார். ஒழுக்கம் அற்றவர் இழிவானவராக மாறுகின்றார்.
ஆகவே தான் ஒழுக்கம் சிறப்பான ஒன்றாக காணப்படுகின்றது. இன்னும் ஏழையாக இருக்கக்கூடிய ஒருவர் கூட செல்வம், புகழ், பெருமை அனைத்தையும் பெறுவதற்கு ஏதுவாக அமைவது ஒழுக்கம் தான் என்பது ஒழுக்கத்தின் சிறப்புகளை எமக்கு எடுத்துக்காட்டுகின்றது.
மாணவர்களது ஒழுக்கம்
பொதுவாகவே பாடசாலைகளில் மாணவர்கள் கற்றுக் கொள்ளக்கூடிய ஒரு நன்னடத்தையாகவே இந்த ஒழுக்கம் காணப்படுகின்றது.
அதாவது பாடசாலையில் சீருடை, பணிவான நடத்தை, ஆசிரியர்களுக்கான மரியாதை, ஒழுங்கான வரவு, கல்வியில் ஆர்வம், இணைப்பாடு விதான செயற்பாடுகளில் ஈடுபாடு, சக மாணவர்களுடன் நடந்து கொள்ளும் விதம் போன்ற அனைத்தும் ஒரு மாணவனின் ஒழுக்கத்தினை சார்ந்ததாகவே காணப்படுகின்றது.
ஆகவே மாணவர் பருவத்தினில் அனைத்து மாணவர்களும் ஒழுக்கங்களை முறையாக கற்றுக் கொள்ளுதல் அவசியமானதாகும்.
தற்கால மாணவர்களின் நிலை
தற்காலங்களில் மாணவர்களது ஒழுக்கம் மிகவும் மோசமான நிலையிலேயே காணப்படுகின்றது. திரைப்பட கதாநாயகர்களினை முன்னுதாரணமாகக் கொண்டு இன்று பல மாணவர்கள் தங்களுடைய நடை, உடை, பாவனை என்பவற்றினை மாற்றி அமைத்துள்ளனர்.
இன்று மாணவர்கள் ஆசிரியர்களை மதிக்காமல் ஒழுக்க சீர்கேட்டுச் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர். இவ்வாறான செயற்பாடுகளுக்கு போதைப் பொருள் பாவனை, அதிகமான தொலைபேசி பாவனை போன்றன காரணமாக அமைவதனையும் நாம் காணலாம்.
முடிவுரை
நாம் வாழக்கூடிய உலகில் முதுகெலும்பாக காணக்கூடியவர்கள் மாணவ சமுதாயமே. எனவே சிறந்ததொரு மாணவர் சமூகத்தை கட்டி எழுப்புவதற்கு மாணவர்களுக்குரிய ஒழுக்கங்களை முறையாக கற்றுக்கொடுத்தல் அவசியமானதாகும்.
அந்த வகையில் மாணவர்களுக்குரிய ஒழுக்கம் தொடர்பான தெளிவினை கற்று கொள்வது ஒவ்வொரு மாணவர்களினதும் கடமையாகும்.
You May Also Like: