பாரதி கண்ட புதுமைப்பெண் கட்டுரை

bharathi kanda puthumai pen katturai

பாரதியார் பெண்களுக்கெதிரான அடக்குமுறைகள் மற்றும் இன்னல்களுக்கெதிராக குரல் கொடுத்து பெண் அடிமைத்தனத்தை உடைத்தெறிந்து போராடியதொரு வீரரே மகாகவி பாரதியாராவார். பெண்ணியம் போற்றும் சிறப்புமிக்க மனிதராக வாழ்ந்தவராவார்.

பாரதி கண்ட புதுமைப்பெண் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • பாரதி காலப்பகுதியில் வாழ்ந்த பெண்களது நிலை
  • பெண்களின் உரிமைகள்
  • புதுமைப் பெண்ணின் இயல்புகள்
  • இன்றைய சமூகத்தில் பெண்கள்
  • முடிவுரை

முன்னுரை

மகாகவி பாரதியார் சமூகத்தை மாற்றியமைத்து புதுமைப்பெண் என்ற வடிவத்தை பெண்களுக்கு வழங்கியவராவார். அந்த வகையில் இன்று பெண்கள் தலை நிமிர்ந்து பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கவும், பெண்ணியம் போற்றவும் காரணமானவராக பாரதியார் திகழ்கின்றார்.

பாரதி காலப்பகுதியில் வாழ்ந்த பெண்களது நிலை

மகாகவி கவிஞரான பாரதியின் காலப்பகுதியில் பெண் அடிமைத்தனமானது மேலோங்கி காணப்பட்டது. அதாவது ஆணாதிக்கமே இடம் பெற்றதோடு ஆண்களைப் போன்று கல்வியிலோ அல்லது வேலையிலோ ஈடுபடாத ஓர் அடக்குமுறைமையே பெண்களுக்கு நிகழ்ந்தது.

மேலும் அக்காலப்பகுதியில் சீதனக் கொடுமைகள் மற்றும் சிறு வயது திருமணம் என பல்வேறுபட்ட இன்னல்களுக்கு பெண்கள் இலக்காகி வந்தனர்.

இத்தகைய சூழலில் பெண் விடுதலைக்காக குரல் கொடுத்தவராக பாரதியார் காணப்பட்டதோடு தனது எதிர்பார்ப்பு, கனவு, குறிக்கோள் போன்றவற்றை அடிப்படையாகக்கொண்டு புதுமைப் பெண் என்ற கவிதையை படைத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

பெண்களின் உரிமைகள்

பெண்களானவர்கள் சமூகத்தில் சிறப்புமிக்கவர்கள் என்றடிப்படையில் பெண்மையை போற்றுவதானது அனைவரதும் கடமையாகும் என்பதனை எடுத்தியம்பியவர் பாரதி ஆவார்.

கல்வி உரிமை மற்றும் ஆண்களுக்கு நிகராக பெண்களும் சமமாக மதிக்கப்படுவதற்கான உரிமை, விரும்பியவரை திருமணம் செய்வதற்கான உரிமை என பல்வேறு பெண் உரிமைகளை மக்கள் மனதில் நிலை நிறுத்திய பெருமை பாரதியையே சாரும்.

புதுமைப் பெண்ணின் இயல்புகள்

பாரதியார் தனது வேட்கை மற்றும் கற்பனை, எதிர்பார்ப்பு என்பவற்றின் அடிப்படையில் உருவாக்கிய ஓர் கற்பனை வடிவமே புதுமைப் பெண் எனும் வடிவமாகும்.

அந்த வகையில் பாரதி கண்ட புதுமை பெண்ணின் இயல்புகளாக தலைநிமிர்ந்த நடை, நேர்கொண்ட பார்வை, யாருக்கும் அஞ்சாமல் செல்லும் தைரியம், நிமிர்ந்த ஞானச்செருக்கு என்பன காணப்படுகின்றது.

பெண்மையினை போற்றும் வகையில் புதுமைப் பெண் கவிதையானது திகழ்கின்றதோடு இன்று பெண்கள் பல உயர்பதவிகளில் வகிப்பதற்கான அடித்தளத்தினையும் புதுமைப்பெண் கவிதை வழங்குகின்றது.

இன்றைய சமூகத்தில் பெண்கள்

இன்று சமூகத்தில் பெண்களானவர்கள் கல்வி ரீதியாக பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருகின்றனர். அந்த வகையில் பெண்களுக்கு வழங்கப்பட்ட கல்வி உரிமையே இன்று அவர்களை பல துறைகளில் வேலை செய்யவும், தனது குடும்பத்தை நிர்வகிக்கவும் வழியமைத்துள்ளது.

அதேபோன்று இன்று பெண்களே நாட்டின் கண்களாகவும் திகழ்கின்றனர். இவ்வாறாக பெண்கள் சிறந்த முறையில் காணப்பட்ட போதிலும் சில இடங்களில் இன்றும் பெண் அடிமைத்தனமானது காணப்படவே செய்கின்றது.

முடிவுரை

பெண்களும் ஆண்களைப் போன்றே உரிமையுடையவர்களாக கருதப்பட வேண்டும் என்ற வகையில் பாரதி கண்ட புதுமைப் பெண்ணிற்கான இயல்புகள் ஒவ்வொரு பெண்ணிடமும் காணப்படுகின்ற போதே சமூகத்திற்கு மத்தியில் காணப்படும் பெண்ணடிமைத்தனங்களை தகர்த்தெறிய முடியும்.

பெண்களை போற்றுவதோடு நின்றுவிடாமல் அவர்களை மதித்து நடப்பதும் எமது கடமை ஆகும்.

You May Also Like:

பெண் விடுதலை கட்டுரை

பாரதியார் பற்றிய பேச்சு போட்டி