பாரதிதாசன் இலக்கிய பணி கட்டுரை

bharathidasan ilakkiya pani katturai in tamil

புரட்சிக்கவி என்றும் பாவேந்தர் என்றும் சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படுபவரே பாரதிதாசன் ஆவார். இவர் தமிழ் இலக்கியம் மற்றும் இலக்கணம் போன்றவற்றை கற்று தமிழ் மொழிக்கு அருந் தொண்டாற்றியவர் என்றவகையில் இவரது இலக்கிய பணியானது சிறப்புற்றே விளங்குகின்றது.

பாரதிதாசன் இலக்கிய பணி கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • புரட்சிக் கவிஞர்
  • இலக்கிய பணி
  • பாரதிதாசனின் தமிழ் பற்று
  • இயற்கை கவிஞர்
  • முடிவுரை

முன்னுரை

மக்கள் மனதை வென்று மக்கள் மனதில் நீங்காத இடத்தினை பெற்று வருபவரே புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆவார். இவர் இலக்கியத்திற்கு ஆற்றிய பணிகளானவை எண்ணிலடங்காதவை ஆகும். தமிழ் மீது மிகுந்த பற்றுக் கொண்ட பாரதிதாசனின் இலக்கிய பணி பற்றி இக்கட்டுரையில் நோக்கலாம்.

புரட்சிக் கவிஞர்

புரட்சிக் கவிஞர் என போற்றப்படும் இவர் தனது 11வது வயதில் பல்வேறு பாடல்களை இயற்றியதோடு பாரதியார் மீது அதிக பற்று கொண்டவராகவும் காணப்பட்டார். இவர் தமிழுக்கு ஆற்றிய பங்களிப்பானது இன்று வரை போற்றப்படக் கூடிய தொன்றாகும்.

மேலும் இவர் தொழிலாளிகளின் மனதில் புரட்சிகரமான மாற்றத்திற்கு வித்திட்டு சிறந்த முன்னேற்றத்திற்கு வழிவகுத்தவராவார். அதாவது

சித்திர சோலைகளே – எமை இங்கு
திருத்த இப்பாரினிலே
எத்தனை தோழர்கள்,
ரத்தம் சொரிந்தனரே இம் மேதினிலே

என பல புரட்சிகரமான சமூக கருத்துக்களை முன்வைத்து இலக்கிய பணியை மேற்கொண்டவராவார்.

இலக்கிய பணி

பாரதிதாசனுடைய இலக்கியமானது இசையுணர்வையும் நல்லெண்ணத்தையும் அடியொட்டியதாக காணப்பட்டது. அதாவது தனது சிறுவயதிலேயே பாடல்களை மிகுந்த அழகுடனும் சிறந்த மொழி நடையுடனும் இயற்றினார்.

இவர் ஆரம்ப காலங்களில் திராவிட இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவராக திகழ்ந்ததோடு அதன் காரணமாக கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு, மத எதிர்ப்பு போன்றவற்றினை தனது பாடல்கள் மூலமாக வெளிப்படுத்தினார்.

பாரதிதாசனது இலக்கிய பணியானது அவரது மறைவிற்கு பின்னரும் நூல் வடிவம் பெற்று இன்றும் போற்றப்பட்டே வருகின்றது.

அதாவது இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், இலக்கிய கோலங்கள், கற்கண்டு என்ற இலக்கியங்களானவை இன்றும் அவரது இலக்கிய பணியையே பறை சாற்றுகின்றது.

இவர் கவிதை, கட்டுரை என பல புதிய கவிதைகளின் வளர்ச்சிக்கு வித்திட்டமையானது இவரது இலக்கிய பயணத்தின் வளர்ச்சியாகவே திகழ்கின்றது.

பாரதிதாசனின் தமிழ்ப் பற்று

தாய் மொழியான தமிழ் மீது பாரதியாரை போன்று தீவிர பற்றுக் கொண்டவரே பாரதிதாசன் ஆவார். இவர் தமிழ் மொழி பற்றி பல கவிதைகளை இயற்றினார்.

அந்த வகையில் “தமிழுக்கும் அமுதென்று பேர் – அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என்று தமிழ் மொழியின் பெருமையினை எடுத்துக் கூறியவராவார்.

மேலும் மூடநம்பிக்கைகள், பெண்ணடிமைத்தனம், சாதி, மத பிரச்சினைகள் என பல சமூக பிரச்சினைகளை இல்லாதொழிக்க பாடுபட்டவராவார்.

இயற்கை கவிஞர்

தமிழ் நாட்டில் இயற்கையாகிய தனித் துறைக்கு முதன் முதலில் கவிதை நூல் எழுதியவர் பாரதிதாசன் என்றவகையில் அவர் எழுதிய “அழகின் சிரிப்பு” என்ற நூலே இயற்கை அழகின் எழிலை பாடுகின்றது.

மேலும் இக்கவிதையானது செந்தமிழில் மிகவும் அழகாக பாடப்பட்டதோடு மட்டுமல்லாமல் நகைச்சுவை உணர்வு மற்றும் இயற்கை வளங்களை எளிய நடையில் பாடியுள்ளமை என்பதினூடாகவும் இவர் இயற்கை கவிஞராக திழ்கின்றமை சிறப்பிற்குரியதாகும்.

முடிவுரை

பாரதிதாசனுடைய இலக்கிய படைப்புக்கள் ஒவ்வொன்றும் எம் வாழ்விற்கு ஓர் படிப்பினையாகவே அமைந்துள்ளன. இவருடைய இலக்கிய பணியானது இன்றும் அனைவராலும் பேசப்படக்கூடிய தொன்றாகவே காணப்படுகின்றமை இவரது பெருமையினையே பறைசாற்றுகின்றது.

You May Also Like:

பாரதியார் பற்றிய பேச்சு போட்டி

என்னை ஈர்த்த தமிழ் ஆளுமை கட்டுரை