ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற பழமொழிக்கிணங்க அனைவரும் ஒற்றுமையாகவும் ஐக்கியமுடனும் வாழ்வது அவசியமாகும். அந்த வகையில் சமூக ஒற்றுமையே எமது பாதுகாப்பிற்கும் மகிழ்ச்சியான வாழ்விற்கும் அடித்தளமாகும்.
அதாவது ஓர் நாடானது சிறப்பாகக் காணப்படுகிறது என்றால் அதற்கான பிரதான காரணம் இன, மத, மொழி பேதமின்றி அனைவரும் சமூக ஒற்றுமையோடு வாழ்வதாகும்.
சமூக ஒற்றுமைக்கான வழிமுறைகள் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- சமூக ஒற்றுமையின் முக்கியத்துவம்
- சமூக ஒற்றுமைக்கான வழிமுறைகள்
- ஒற்றுமையின் பயன்கள்
- சமூக ஒற்றுமை தினம்
- முடிவுரை
முன்னுரை
எமது சமூகமானது சிறந்த எதிர்காலத்தை நோக்கிப் பயணிப்பதற்கு சமூக ஒற்றுமையே அவசியமானாதாகும். மேலும் இயந்திரமாக சென்று கொண்டிருக்கும் வாழ்க்கைப் பயணமானது சிறப்பாக மாறவேண்டுமாயின் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
அந்த வகையில் கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற பழமொழியானது சமூக ஒற்றுமையினால் கிடைக்கும் நன்மையினையே எடுத்தியம்புகின்றது.
சமூக ஒற்றுமையின் முக்கியத்துவம்
ஒரு மனிதனானவன் தனது சமூகத்தோடு இணைந்து ஒற்றுமையாக வாழ்கின்ற போதே மகிழ்ச்சியாகவும், சண்டைகள் இன்றியும் வாழ முடியும்.
அதாவது உலகமானது பிழவுபடாமல் ஒற்றுமையை பேணும் போதே எம்மால் வாழ்வில் உயர்வடைய முடியும் என்பதோடு மட்டுமல்லாமல் எம் அனைவரதும் வாழ்வானது அர்த்தமுள்ளதாக காணப்பட வேண்டுமாயின் சமூக ஒற்றுமையை பேணுவது அனைவரதும் கடமையாகும்.
சமூக ஒற்றுமைக்கான வழிமுறைகள்
நாம் வாழும் உலகில் சமூக ஒற்றுமையை பேணுவதில் அனைவரும் அக்கறை கொண்டே செயற்பட வேண்டும். அந்தவகையில் சமூக ஒற்றுமைக்கான வழிமுறைகளை நோக்குவோமேயானால்,
அன்பு செலுத்துதல்: சமூக ஒற்றுமையின் அடித்தளமே ஒவ்வொரு சமூகத்தினரும் அன்பை ஆயுதமாகப் பயன்படுத்தி வெளிப்படுத்துவதாகும். அன்பானது எமது உள்ளத்தில் விட்டுக்கொடுப்பு, கருணை என பல நற்குணங்களை ஏற்படுத்தக்கூடியதாகும்.
இன, மத, பேதங்களை ஒழித்தல்: இன்று பல்வேறு சமூக பிரச்சினைகளுக்கு காரணம் இந்த இன, மத, பேதங்களாகும். இத்தகைய பேதங்களை ஒழிப்பதன் மூலமே சமூகத்தில் பிரிவினை ஏற்படுவதைத் தடுத்து கொள்வதோடு ஒற்றுமையையும் பேணமுடியும்.
வேற்றுமைகளைக் களைதல்: இன்று சமூகத்தில் ஒற்றுமையின்மைக்கான பிரதான காரணங்களில் ஒன்றே வேற்றுமைகளாகும். அதாவது உயர்ந்தவன், தாழ்ந்தவன், மேல் சாதி, கீழ்சாதி என வேற்றுமைகளைக் கொண்டவர்களாகவே பலர் காணப்படுகின்றனர். இத்தகைய நிலையினைத் தகர்த்தெறிந்து அனைவரும் ஒரு தாய் மக்கள் என வாழ்வதன் மூலமே சமூக ஒற்றுமையை காத்திட முடியும்.
ஈகை குணம் வளர்த்திடல்: ஈகை குணத்தினை பேணுவதானது சமூகத்தின் ஒற்றுமையைப் பேணுவதில் பிரதான இடத்தினை வகிக்கின்றது. அதாவது ஒரு மனிதனுக்கு ஏதும் துன்பம் நேருகின்ற போது நாம் எம்மாலான உதவிகளை செய்வதே நாம் எமது சமூகத்தின் ஒற்றுமையை பேணுவதில் பங்காற்றுகின்றது. ஒவ்வொருவரும் ஈகைக் குணத்தினை வளர்ப்பது அவசியமானதாகும்.
சமத்துவம் பேணல்: நாம் அனைவரும் மனிதம் என்ற ரீதியில் ஒரே மக்கள் என்ற அடிப்படையில் சமத்துவம் பேணுவது அனைவரது கடமையாகும். இதனூடாகவே சமூகமானது ஒற்றுமையாக செயற்பட முடியும். மேலும் பிரிவினைகளை ஏற்படுத்தும் பல்வேறு விடயங்களை தவிர்த்து ஒற்றுமையே பலம் என வாழ்வோமேயானால் எமது சமூகத்தின் ஒற்றுமையை காக்க முடியும்.
ஒற்றுமையின் பயன்கள்
ஒரு மனிதனானவன் சமூக ஒற்றுமையை பேணி வாழ்வதன் மூலமே அவனிடம் சமூகப் பாதுகாப்பானது உறுதிப்படுத்தப்படுகின்றது. மேலும் நாட்டின் வளர்ச்சியிலும், கல்வியின் வளர்ச்சியிலும், சமூக ஒற்றுமையே பிரதான இடத்தை வகிக்கின்றது.
அது போலவே எம்மிடம் காணப்படும் தீயகுணங்கள் அகன்று சகிப்புத்தன்மை, இரக்கம், பொறுமை என நற்குணங்கள் வளர்ச்சியடையவும் ஒற்றுமையே துணைபுரிகின்றது.
சமூக ஒற்றுமையின் மூலமாகவே வன்முறைகளற்ற சமூகத்தை உருவாக்கவும் மனித இன அழிவை தடுக்கவும் முடியும்.
சமூக ஒற்றுமை தினம்
இந்தியாவில் மகாத்மா காந்தியடிகளின் பிறந்த தினமான அக்டோபர் 2ம் திகதியை சமூக ஒற்றுமை தினமாக கொண்டாடி வருகின்றனர்.
அதாவது காந்தியடியின் கொள்கைகளில் ஒன்றாகவே சமூக ஒற்றுமை காணப்படுவதோடு இதனை அறிந்து மக்கள் சமூக ஒற்றுமையை பேண வேண்டும் என்பதனை நோக்காக கொண்டே இந்தியாவில் சமூக ஒற்றுமை தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.
முடிவுரை
இன்று காணப்படும் பல்வேறு சமூக ரீதியான பிரச்சனைகளுக்கு காரணம் ஒற்றுமையின்மையே ஆகும். ஒற்றுமையான சமூகத்தை கட்டியெழுப்புவதன் மூலமே எம்மால் இவ்வுலகில் மகிழ்சிகரமான வாழ்வை வாழ முடியும்.
You May Also Like: