ஆரோக்கியமான உணவுகளில் முக்கிய இடத்தை பிடித்துக் கொண்டவை சிறு தானியங்களாகும். இது பாரம்பரிய உணவு முறைகளின் ராஜாவாக இடம் பெறுவதோடு பல்வேறு நன்மைகளையும் தன்னகத்தே கொண்டு காணப்படுகின்றது. அந்தவகையில் ஊட்டச்சத்தில் பிரதான பங்கினையும் சிறு தானியங்களே வகிக்கின்றது.
சிறுதானியங்கள் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- சிறு தானியங்கள் என்பது
- சிறு தானியங்களின் வகைகள்
- சிறு தானியங்களை உண்பதால் கிடைக்கும் நன்மைகள்
- ஊட்டச்சத்தின் களஞ்சியமே சிறு தானியங்கள்
- முடிவுரை
முன்னுரை
பழந்தமிழர்களின் உணவில் பெரும் பங்கினை வகிப்பனவாக சிறு தானியங்கள் காணப்படுகின்றன. சிறு தானியங்களானவை ஆரம்ப காலம் தொடக்கம் இன்று வரை பேணப்பட்டு வருகின்றமை சிறப்பிற்குரியதாகும்.
எமது ஆரோக்கியத்தினை மேம்படுத்துவதற்கானதோர் உணவுகளாக விளங்கும் சிறு தானியங்கள் பற்றி இக்கட்டுரையில் நோக்கலாம்.
சிறுதானியம் என்பது
சிறுதானியம் எனப்படுவது உருவில் சிறியதாக காணப்படும் தானிய வகைகளாகும். அதாவது வரகு, சாமை, கேழ்வரகு, திணை, குதிரைவாலி, பனி வரகு போன்றவையே சிறு தானியங்களாகும்.
சிறுதானியங்கள் நிறைந்த உணவுகளை உட் கொள்வதனூடாக பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாப்பை பெற முடியும். நாம் இன்று உணவில் எடுத்துக் கொள்ளும் நெல் மற்றும் கோதுமை போன்றவற்றை காட்டிலும் அதிகளவில் புரதம், நார், இரும்பு, சுண்ணாம்பு போன்ற சத்துக்கள் சிறுதானியங்களில் காணப்படுகின்றன.
சிறு தானியங்களின் வகைகள்
சிறு தானியங்களானவை பல்வேறு வகைகளில் காணப்படுகின்றன. அந்த வகையில் சில சிறு தானியங்களை நோக்குவோமேயானால்,
வரகு: இது ஆபிரிக்க நாடுகளின் பிரதான உணவு பயிராக காணப்படுகின்றது. அதாவது அரிசியினூடாக நாம் தயாரிக்கின்ற உணவு வகைகளை வரகு என்ற சிறு தானியத்தை பயன்படுத்தி தயாரிக்க முடியும். இதனுள் புரதம், நார்ச்சத்து, தயமின் சத்துக்கள் காணப்படுகின்றது.
சாமை: சாமையானது வரகினைப் போன்ற சிறு தானியங்களுள் ஒன்றாகும். இது தாது பலத்தினை அதிகரித்து உயிரணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கின்றது. மேலும் சாமை உணவை சாப்பிட்டவருக்கு வயிறு முட்ட சாப்பிட்ட திருப்தியும் உணர்வும் உண்டாகும்.
கேழ்வரகு: ராகி என்ற பெயரில் அழைக்கப்படும் ஒரு வகை சிறு தானியமே கேழ்வரகாகும். இது எமது உடல் நலத்தை பேணுவதில் சிறந்ததாகும். மேலும் இதனை பயன்படுத்தி கூழ், பிட்டு, தோசை, ரொட்டி போன்ற உணவு வகைகளை தயாரித்துக் கொள்ள முடியும்.
திணை: இன்று அதிகளவில் விளைவிக்கப்படும் ஓர் சிறு தானியமே திணையாகும். இதனை ஏனல் கங்கு, இறடி எனவும் அழைப்பர். நார்ச்சத்து மற்றும் தயமினை கொண்டுள்ளதோர் தானிய வகையாகும்.
சிறு தானியங்களை உண்பதால் கிடைக்கும் நன்மைகள்
சிறு தானியங்களானவை தன்னகத்தே பல்வேறு நன்மைகளை கொண்டு காணப்படுகின்றன. எமது உடலை வலுப்படுத்துவதற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கொண்டதாகவே சிறு தானியங்கள் அமைந்துள்ளன.
மேலும் புற்று நோயிலிருந்து எம்மை காக்கிறது. அதாவது மார்பக புற்று நோய் அபாயத்தை தடுக்கிறது.
மேலும் விற்றமின் டீ சத்தினை கொண்டதாகவும், எடையை குறைக்க கூடியதாகவும், ஒவ்வாமை நோயை தடுத்தல் மற்றும் உயர் இரத்த அழுத்தத்தை குறைத்தல், நார்ச்சத்து, தசைகள் வலுப் பெறல், நீரிழிவு நோயை கட்டுப்படுத்தல் என பல்வேறு நன்மைகளை கொண்டமைந்ததாகவே காணப்படுகின்றது.
ஊட்டச்சத்தின் களஞ்சியமே சிறு தானியங்கள்
இன்று உடலின் ஆரோக்கியத்தில் பிரதான இடத்தினை பெற்று வருபவையே சிறு தானியங்களாகும். அதாவது நாம் இன்று உண்ணும் உணவை விடவும் அதிக ஊட்டச்சத்துக்களை கொண்டவையே சிறு தானியங்களாகும்.
நாம் இதனை உணவாக எடுத்துக் கொள்கின்ற போது நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கப்படுகின்றது. மேலும் உடலில் ஏற்படும் பல்வேறு நோய்கள் மற்றும் இருதய நோய்களிலிருந்து எம்மை காப்பதற்கும் உதவுகின்றது.
முடிவுரை
நாம் தினமும் உண்ணும் உணவுகளில் ஊட்டச்சத்துமிக்க சிறு தானியங்களை ஒரு வேளை உணவிலாவது எடுத்துக் கொள்வது அவசியமாகும்.
மேலும் நாம் சிறு தானியங்களை அதிகளவில் பயிரிடுவதன் மூலமும் எம்மையும் எமது சமூகத்தையும் பல்வேறு கொடிய நோய்களிலிருந்து காத்து கொள்ள முடியும்.
You May Also Like: