உடற்பயிற்சி நன்மைகள் கட்டுரை

udarpayirchi nanmaigal katturai in tamil

உடல் ஆரோக்கியத்தை பேணுவதற்கான சிறந்த வழிமுறை உடற்பயிற்சியாகும். அந்த வகையில் ஒரு மனிதனானவன் சிறந்த வாழ்க்கையை வாழ்வதற்கும், ஒரு நாளை சிறப்பானதாக மாற்றுவதற்கும் உடற்பயிற்சி அவசியமாகும்.

உடற்பயிற்சி நன்மைகள் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • உடற்பயிற்சியின் அவசியம்
  • உடற்பயிற்சியின் நன்மைகள்
  • உடலை வலுப்படுத்தும் உடற்பயிற்சி
  • இன்றைய காலகட்டத்தில் உடற்பயிற்சி
  • முடிவுரை

முன்னுரை

எமது உடலையும் உள்ளத்தையும் சீர் பெறச்செய்யும் ஓர் வழிமுறையாக உடற்பயிற்சி காணப்படுகிறது. நோயற்ற சிறந்த வாழ்க்கையை வாழ்வதற்கு உடற்பயிற்சி அவசியமாவதோடு ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்குவதில் உடற்பயிற்சியின் பங்கு அளப்பரியதாகும்.

உடற்பயிற்சியின் அவசியம்

நாம் சாதாரணமாக மேற்கொள்ளும் செயற்பாடுகளான நடத்தல், ஓடுதல், ஒரு பொருளை தூக்குதல் போன்றனவும் உடற்பயிற்சிகளே ஆகும்.

ஒரு மனிதனுடைய வாழ்வானது சிறப்பாகவும் உற்சாகமாகவும் திகழ உடற்பயிற்சி அவசியமாகும். மேலும் ரத்த ஓட்டம் சீர் பெறவும், உடல், உள்ளம் சீர்பெறவும், தேக ஆரோக்கியம் மற்றும் கட்டுக்கோப்பான உடலை பெறவும் உடற்பயிற்சி அவசியமாகும்.

நாளாந்தம் கடைப்பிடிக்கும் உடற்பயிற்சியே எம்மை நோயற்ற ஆரோக்கியமான வாழ்க்கையை வாழவைக்கும்.

உடற்பயிற்சியின் நன்மைகள்

இன்றைய உலகில் உடற்பயிற்சியால் பல்வேறு நன்மைகள் எமக்கு ஏற்படுகின்றன. அதாவது நாம் உடற்பயிற்சி செய்யும்போது அதிக கலோரிகள் எரிக்கப்படுகிறது. இது எமது தசைகளை வளர்ப்பதற்கும் உடல் எடை அதிகரித்து காணப்படும் போது குறைக்கவும் உதவுகிறது.

அதேபோன்று தினமும் நாம் செய்யும் உடற்பயிற்சியானது மூளையின் செயற்பாட்டை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றது. மேலும் இதய அழுத்தத்தை குறைத்தல் மற்றும் எமது உடலிலுள்ள சக்கரையின் அளவை கட்டுப்படுத்துதல் என பல்வேறு நன்மைகளை எமக்களிக்க கூடியதாகவே உடற்பயிற்சியானது காணப்படுகின்றது.

உடலை வலுப்படுத்தும் உடற்பயிற்சி

நாம் செய்யும் உடற்பயிற்சிகளானவை எம்மை ஆரோக்கியமாகவும் சிறப்பாகவும் வைத்திருக்க உதவுகின்றது. நாம் சாதரணமாக மேற்கொள்ளும் உடற்பயிற்சியின் மூலமாக எமது உடலில் அதிக வியர்வை வெளியாகுவதோடு உடல் உறுதி ஏற்பட்டு எமது உடல் வலிமை பெறும்.

உடற்பயிற்சியின் மூலமாக எமது உடலிலுள்ள எலும்புகள் வளர்ச்சி பெறுவதோடு அஸ்டியோ போராசிஸ், ஆர்த்ரிடிஸ் போன்ற நோய்களிலிருந்து எம்மை காக்கும்.

அதேபோன்று முதுகுவலி ஏற்படும் போது அதன் வலியை குறைப்பதற்கு நாம் சாதாரணமாக வளைந்து மேற்கொள்ளும் உடற்பயிற்சியை செய்வதன் மூலம் இலகுவாக குணப்படுத்த முடியும்.

மேலும் எமது உடலை வலுப்படுத்தி இளமையுடனும் கட்டுக்கோப்புடனும் வாழ்வதற்கு உடற்பயிற்சியானது துணைபுரிகிறது.

இன்றைய காலகட்டத்தில் உடற்பயிற்சி

ஆரம்பகாலங்களை போன்றல்லாது இன்று உடற்பயிற்சி செய்தலானது அருகியே காணப்படுகிறது. அதாவது ஆரம்ப காலங்களில் ஆண்கள் மற்றும் பெண்கள் என அனைவரும் தனது அன்றாட வேலைகளை செய்வதினூடாக உடற்பயிற்சியினை மேற்கொண்டார்கள்.

உதாரணமாக நடத்தல், எடையுள்ள பொருட்களை எடுத்தல், குனிந்து நிமிர்ந்து வேலைகளை செய்தல் போன்றனவாகும்.

ஆனால் இன்று வேலைகளும் நவீனமயப்படுத்தப்பட்டதன் காரணமாக இயந்திரங்களே நாம் செய்யும் வேலைகளை பெருவாரியாக மேற்கொள்கின்றன. அது மட்டுமல்லாது பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் இவ்வுலகில் மனிதர்களானவர்கள் உடற்பயிற்சி செய்வதனை வாழ்வில் முக்கியமானதாக கருதுவதில்லை இதன் காரணமாகவே உடல் ஆரோக்கியமற்று காணப்படுகிறது.

முடிவுரை

உடற்பயிற்சியை மேற்கொள்வதானது பல்வேறு வகையில் எம் ஆரோக்கியத்தை பேணுவதோடு மட்டுமல்லாமல் எமது உடலிலுள்ள பல நோய்களுக்கான மருந்தாகவும் திகழ்கின்றது. எனவே உடற்பயிற்சி செய்வோம் ஆரோக்கியத்தை காப்போம்.

You May Also Like:

சுற்றுலா பயணம் கட்டுரை

ஊட்டச்சத்து பற்றிய வாசகங்கள்