நாம் வாழும் சூழலில் மனித செயற்பாடுகளினாலோ அல்லது இயற்கையின் விளைவுகளாளோ குப்பைகள் உருவாகலாம். அவ்வாறு உருவாகக்கூடிய குப்பைகளை முறையாக அகற்றுவது எமது சூழலுக்கும், எமக்கும் நன்மை பயக்கும் ஒரு விடயமாகும்.
குப்பை பற்றிய கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- குப்பைகள் முகமைத்துவம்
- மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள்
- குப்பைகளால் கிடைக்கும் நன்மைகள்
- குப்பைகளால் உருவாக்கும் தீமைகள்
- முடிவுரை
முன்னுரை
இன்று நாம் வாழும் உலகம் மாசடைந்து கொண்டே வருகின்றது. அவ்வாறு மாசடைவதில் பிரதான பங்கு வைப்பது இந்த குப்பைகள் ஆகும். அதாவது மனிதனது தொழில்நுட்ப, கைத்தொழில் வேலைகளில் எச்சமாக கூடிய சிறிய சிறிய பொருட்கள் குப்பைகளாக மாறுகின்றன.
இவ்வாறான குப்பைகளை முறையாக அகற்றாமையினால் இன்று பல்வேறு தொற்று நோய்களும், கிருமித் தொற்றுகளும் ஏற்படுவதனை காணலாம்.
குப்பைகள் முகாமைத்துவம்
மனிதர்களையும் மனிதர்கள் வாழக்கூடிய இயற்கை சூழலையும் பாதுகாப்பதற்கான மிகச் சிறந்த வழி குப்பைகளை உரிய முறையில் முகாமைத்துவம் செய்வதாகும். அதாவது குப்பைகளை தரம் பிரித்து அவற்றை சரியான முறையில் அகற்ற வேண்டும்.
பாடசாலைகள், பூங்காக்கள், பல்கலைக்கழகங்கள் போன்ற பொதுவான இடங்களில் குப்பைகளை தரம் பிரித்து போடக்கூடிய குப்பை கூடைகளை வைத்தல் அவசியமானதாகும்.
மேலும் பொருட்களை மீள் பாவனை செய்தல், மீள் சுழற்சி போன்ற முறைகளை கையாள்வதன் ஊடாகவும் சூழலில் அதிகமான குப்பைகள் சேராமல் பாதுகாக்க முடியும்.
மக்கும், மக்காத குப்பைகள்
சூழலில் காணப்படக்கூடிய குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகள் என இரு வகைப்படுத்த முடியும். அதாவது மக்கும் குப்பைகள் என்பது நுண்ணங்கிகளால் மிகவும் சொற்ப காலங்களில் சிதைக்கப்படக்கூடிய குப்பைகள் ஆகும்.
உதாரணமாக நாம் அன்றாடம் பாவிக்க கூடிய மரக்கறி வகைகள், பழங்கள், இலை குலைகள் போன்றவற்றினை குறிப்பிட முடியும். அதேபோன்று மக்காத குப்பைகள் என்பது நுண்ணங்கிகளினால் சிதைக்கப்பட முடியாத அல்லது சிதைப்பதற்கு நீண்ட காலம் எடுக்க கூடிய குப்பைகள் ஆகும்.
இவற்றுக்கு உதாரணமாக பொலித்தீன் பைகள், பிளாஸ்டிக் நீர் போத்தல்கள் மற்றும் உலோகப் பொருட்கள் போன்றவற்றினை குறிப்பிடலாம்.
குப்பைகளினால் கிடைக்கும் நன்மைகள்
எமது சூழலில் சேரும் மக்கக் கூடிய குப்பைகளை நாம் சேமித்து வைத்து, அவற்றினை உக்கலடையச் செய்வதன் மூலம் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன.
அதாவது குப்பைகள் மண்ணோடு மண்ணாக உக்கலடைவதனால் மண் வளம் பெறுகின்றது, மற்றும் சேதன பசளையாக பயிர்களுக்கு பயன்படுத்தக்கூடிய வாய்ப்பு கிடைக்கின்றது.
இவ்வாறு சேதன பசளையாக பயன்படுத்துவதனால் நஞ்சு அற்ற காய்கறிகளைப் பெற முடியும். இன்னும் உக்கலடைந்த குப்பைகளை சேதன பசளையாக பயன்படுத்துவதனால் எமது பொருளாதாரச் செலவுகளும் கட்டுப்படுத்தப்படுகின்றன.
குப்பைகளால் உருவாகும் தீமைகள்
பெரும்பாலும் மக்காத குப்பைகளின் மூலமே சூழலுக்கு அதிகமான பாதிப்புகள் அல்லது தீமைகள் ஏற்படுகின்றன. அதாவது மக்காத குப்பைகள் பொலித்தீன், பிளாஸ்டிக் பொருட்கள் போன்றன மண்ணோடு சேர்வதனால் மண்வளம் பாதிக்கப்படுகின்றது.
மேலும் அவற்றை எரிப்பதனால் வளிமண்டலம் மாசடைகின்றது. நதி, கடல் போன்றவற்றில் கொட்டுவதனால் நீர் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன. இவ்வாறான குப்பைகள் மனித இனத்துக்கு மாத்திரமல்லாமல் விலங்குகள், தாவரங்கள், சூழலில் உள்ள நுண்ணங்கிகள் ஆகிய அனைத்துக்கும் பாதகமாகவே அமைகின்றன.
முடிவுரை
குப்பைகளில் நன்மைகளும் உண்டு தீமைகளும் உண்டு என்பதனை நாம் புரிந்து கொண்டு, அவற்றை சரியான முறையில் தரம் பிரித்து, முறையாக முகாமைத்துவம் செய்ய வேண்டும்.
இதனால் எமது ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்வதோடு, வருங்கால சந்ததியினருக்கு எமது சூழலை ஆரோக்கியமானதாகவும் கையளிக்க முடியும். எனவே இவற்றை புரிந்து கொண்டு ஒவ்வொரு மனிதனும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும்.
You May Also Like: