எதிர்பார்ப்பு இன்றி பிறருக்கு உதவுவதே ஈகையாகும் என்ற வகையில் ஒரு மனிதனானவன் ஈகையுடன் வாழும் போதே சிறப்பாக வாழ முடியும். சங்க இலக்கியங்கள் மற்றும் சான்றோர்களின் வாயிலாகவும் ஈகை பற்றி அறிந்து கொள்ள முடிகிறது.
ஈகை பற்றி கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- ஈகை என்பது
- திருக்குறள் கூறும் ஈகை
- ஈகையின் சிறப்புக்கள்
- ஈகைத்திருநாள்
- முடிவுரை
முன்னுரை
எமது முன்னோர்கள் எமக்கு கற்றுத்தந்த ஓர் சிறப்பு மிக்க பண்பே ஈகையாகும். ஒரு மனிதனுடைய தேவையின் போது அவனுக்கு உதவி செய்வது என்பது நாம் செய்யும் தர்மமாகும்.
பிறரிடம் எதிர்பாரது அவர்களுக்கு ஈதல் எம் அனைவரினதும் கடமையாகும். இக்கட்டுரையில் மனித மாண்புகளில் உயர்ந்த மாண்பான ஈகை பற்றி நோக்கலாம்.
ஈகை என்பது
ஈகை என்பது பிறரிடம் எதிர்பாரது அவர்களுக்கு உதவுவதாகும். அதாவது ஒரு மனிதனானவன் வறியவர்களுக்கு உதவுவதனையே சுட்டி நிற்கின்றது.
இன்று எம்மை சுவாசிக்க செய்யும் காற்று, உணவளிக்கும் மரங்கள், நீர் தரும் வான்மழை போன்றன எவ்வித எதிர்பார்ப்புமின்றியே எமது தேவையை நிறைவேற்றுகின்றது. இதுபோன்று பிறருக்கு கொடுத்து உதவுவதே ஈகையாகும்.
திருக்குறள் கூறும் ஈகை
திருக்குறளில் காணப்படும் அதிகாரங்களில் ஒன்றாக ஈகை காணப்படுகின்றது. அந்த வகையில் ஈகை பற்றிய குறட்பாக்களை பின்வருமாறு நோக்கலாம்.
வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து
விளக்கம் – வறுமையானவர்களுக்கு ஒரு பொருளை தந்து உதவுவதே ஈகையாகும். பிறருக்கு கொடுப்பது எல்லாம் எவ்வித எதிர்பார்ப்புமின்றி வழங்குவதாகும்.
நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று
விளக்கம் – நல்ல அறச்செயலுக்கே என்றாலும் பிறரிடம் இரந்து பெறுவது தீமையே மேலுலகம் இல்லையானாலும் பிறருக்கு கொடுத்து உதவுதலே நன்மை பயக்கும்.
இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகங் காணும் அளவு
விளக்கம் – உதவியை நாடிவந்து இரந்தவருடைய மகிழ்ச்சியான முகத்தை காணும் வரைக்கும் இரந்து கோட்க்கப்படுதலும் ஈகையாளனுக்கு துன்பத்தை தரும்.
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்
விளக்கம் – தாம் சேர்த்துள்ள செல்வத்தை காப்பாற்றி வைத்து பின் இழந்து விடும் கல்நெஞ்சர்கள், பிறருக்கு கொடுத்து மகிழும் இன்பத்தை அறியமாட்டார்களே!
ஈகையின் சிறப்புக்கள்
எவர் ஒருவர் ஈகை பண்பு மிக்கவராக காணப்படுகின்றாரே அவரை பசிப்பிணியானது அண்டாது. மேலும் பிறருக்கு கொடுப்பதானது எமது வாழ்வில் மகிழ்ச்சியினை ஏற்படுத்தக்கூடியதொரு செயலாகும். அதேபோன்று நன்மையை ஈட்டித்தரக்கூடிய தொரு செயலாகவும் ஈகை பண்பே சிறப்பிடம் பெறுகின்றது. பிறர் பசியைப் போக்க உதவக் கூடிய நிலையானது சிறந்த தர்மம் ஆகும்.
ஈகைத்திருநாள்
இஸ்லாமியர்களுடைய வாழ்வில் ஈகைத்திருநாள் மிகவும் சிறப்பு வாய்ந்ததொரு திருநாளாகும். இத்திருநாளானது ஏழைகளின் பசியினை உணர்ந்து தாம் உண்ணாமல் நோன்பு இருப்பதனையே சுட்டி நிற்பதோடு ஒவ்வோர் வருடமும் குறிப்பிட்ட மாதத்தில் இடம் பெறக்கூடியதாகும்.
இவ்வாறாக ஒரு மாதம் முடிந்த பிறகு கொண்டாடப்படும் திருநாளாக ஈகைத்திருநாள் காணப்படுகிறது என்ற வகையில் இக்காலப்பகுதியில் பிறருக்கு தர்மம் செய்வதே பிரதானமானதாக காணப்படுகிறது.
மேலும் எவ்வித எதிர்பார்ப்புமின்றி ஏழை எளியவர்களுக்கு உதவுகின்ற நிலையினையும் எடுத்தியம்பக்கூடியதொரு திருநாளாக இது அமைந்துள்ளது.
முடிவுரை
இவ்வுலகில் வாழும் ஒவ்வொருவரும் ஈகைக் குணமிக்கவர்களாக காணப்படுகின்ற போதே அனைவரும் சந்தோசமாக வாழ முடியும். இல்லை என்று சொல்லாது எம்மிடம் இருப்பதை பிறருக்கு கொடுப்பதே தலையாய தர்மமாகும் என்றடிப்படையில் ஈகை பண்பை வளர்த்துக் கொள்வோம்.
You May Also Like: