கீழடி அகழாய்வு கட்டுரை

keeladi agalaivu katturai in tamil

அகழாய்வு என்பது தொல்லியல் எச்சங்களை வெளிக்கொண்டு வருதல், செயற்படுதல், பதிவு செய்தல் போன்றவாறான அர்த்தங்களை தரக்கூடிய ஒன்றாகும். கீழடி கிராமத்தில் 2014ஆம் ஆண்டு முதல் இன்று வரையிலும் பல்வேறு கட்டங்களில் பல்வேறு அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • அறிவியல் காலக்கணிப்பு
  • தமிழகத்தின் வரலாற்றுத் தொன்மை
  • கீழடி அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டவை
  • கீழடி அருங்காட்சியகம்
  • முடிவுரை

முன்னுரை

தமிழகத்தில் நிகழ்ந்த அகழாய்வுகளில் மிகப்பெரிய அகழாய்வாக காணப்படுவது கீழடி அகழாய்வாகும்.

சிவகங்கை மாவட்டத்தில், வைகை நதியின் தென்கரையில் மதுரையிலிருந்து சுமார் 20km தூரத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க ஒரு ஒன்றே கீழடி கிராமமாகும்.

இந்திய தொல்லியல் துறை மற்றும் தமிழக தொல்லியல் துறை என்பவற்றின் அகழ்வாய்வுகளின் போது பல்வேறு புதிய அம்சங்களும், தொன்மையான தமிழர் பண்பாட்டு அம்சங்களும் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அறிவியல் காலக்கணிப்பு

கங்கை, சிந்து நதிக்கரை நாகரிகங்களுக்கு பின்னர் இரண்டாம் நிலை நகர நாகரீகங்கள் தமிழகத்தில் தோன்றவில்லை என்ற கருத்து நிலவி வந்த வேளையில், இந்த கீழடி அகழ்வாய்வானது கி.மு. ஆறாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வைகை நதிக்கரையில் நகரமாக்கல் காணப்பட்டது என்பதனையும், அப்பொழுது வாழ்ந்த தமிழ் சமூகம் எழுத்தறிவு பெற்ற சமூகமாகவும் விளங்கியது என்பதனையும் கீழடி அகழ்வாய்வுகளின் வழியாக தமிழ்நாட்டு அரசு தொல்லியல் துறை தெளிவுபடுத்தி உள்ளது.

தமிழகத்தின் வரலாற்றுத் தொன்மை

ஆரம்பத்தில் தமிழகத்தின் தொன்மையான காலமாக கி.பி. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த சங்க காலமே கொள்ளப்பட்டது.

ஆனால் கீழடி அகழ்வாய்வுகளின் வழியாக, 353Cm ஆழத்தில் கிடைத்த பொருட்கள் கி.மு 580 ஆம் ஆண்டுக்குரியதாகவும், 200Cm ஆழத்தில் கிடைத்த பொருட்கள் கி.மு.205ஆம் ஆண்டுக்குரியதாகவும் கண்டறியப்பட்டது.

இங்கு கண்டறியப்பட்ட எழுத்துக்கள் சங்க காலத்தை கி.மு. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என குறிப்பிடுகின்றது. ஆகவே இந்த கீழடி அகழாய்வானது சங்க காலத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டிய தேவையை ஏற்படுத்தி உள்ளது.

கீழடி அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டவை

கீழடி அகழாய்வுகளின் மூலமாக பல்வேறு புதிய கண்டுபிடிப்புகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

உலகில் மிகவும் பழமையான நாகரீகம் என கருதப்படக் கூடிய கிரேக்க நாகரிக சமூகத்துடன் தமிழர்கள் வணிக தொடர்பு கொண்டுள்ளனர் என்பதற்கான சாத்திய கூறுகள் இந்த அகழ்வாராய்ச்சியின் போது வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் வணிக தொடர்பிற்கான சான்றுகள், தமிழ் பொறிக்கப்பட்ட பானை-ஓடுகள், விலைமதிப்பற்ற மாணிக்கங்கள், சுடுமண்ணாலான முத்திரைகள், விலங்குகளின் எலும்புகள், செப்பு ஆயுதங்கள், அரிய வகையிலான அணிகலன்கள் மற்றும் பானை வனையும் தொழிற்கூடம் போன்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொல்லியல் பொருட்கள் இந்த அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கீழடி அருங்காட்சியகம்

கீழடி அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்லியல் பொருட்களை உலகத் தமிழர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டு களிக்கும் வகையில் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் 18.43 கோடி ரூபாய் செலவில் இந்த கீழடி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு மதுரையும் கீழடியும், வேளாண்மையும் நீர் மேலாண்மையும், கலம் செய்கை, ஆடையும் அணிகலன்களும், கடல்வழி வணிகம் மற்றும் வாழ்வியல் போன்ற ஆறு பொறுமைகளின் அடிப்படையில் தனித்தனிக்கூடங்களாக தொல்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த அருங்காட்சியகம் தமிழர்களின் தொன்மை மற்றும் வரலாற்றையும், கீழடியின் முக்கியத்துவத்தையும் அனைவருக்கும் உணர்த்துவதாக அமைந்துள்ளது.

முடிவுரை

கீழடி ஆழ்வாவுகளின் போது கண்டுபிடிக்கப்பட்ட பல்வேறு தொல்லியல் பொருட்கள் காணப்படுகின்ற அதேவேளை அவை தமிழர்களின் பண்பாடு, கலாசாரம் மற்றும் வரலாற்றுச் சிறப்பு போன்றவற்றையும் பறைசாற்றுவதாக காணப்படுகின்றன.

நாம் எம்முடைய மூதாதையர்களின் வரலாறு பற்றி அறிந்து கொள்வதற்கான ஒரு அம்சமாகவே இந்த கீழடி அகழ்வாய்வு காணப்படுகின்றது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

You May Also Like:

விண்வெளி பயணம் கட்டுரை

வாசித்தேன் வளர்ந்தேன் கட்டுரை