முத்தமிழில் ஒன்றாக காணப்படும் நாடகக் கலையானது அனைத்து கலைகளிலும் முதன்மையானதாகும். நாடகக்கலையானது தொன்று தொட்டு வளர்ச்சியடைந்து வருவதோடு மட்டுமல்லாது இன்று அனைவரது மனதிலும் நீங்கா இடத்தினை பெற்றுக்கொண்டதொரு கலையாகவும் திகழ்கின்றது.
நாடகக்கலை பற்றி கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- நாடகம் என்பது
- நாடகக் கலையின் தோற்றமும், வளர்ச்சியும்
- நாடகக் கலையின் சிறப்புக்கள்
- இலக்கியங்களில் நாடகக் கலை
- முடிவுரை
முன்னுரை
இன்று அனைவராலும் பெரிதும் விரும்பப்படக் கூடியதொரு கலையாக நாடகக்கலையானது காணப்படுகின்றது. மேலும் தமிழ் மொழியின் முதன்மையான கலையாகவும் தமிழ் மக்களின் வாழ்வியலை வெளிப்படுத்துவதில் சிறப்புமிக்கதாகவும் இக்கலையானது காணப்படுகின்றது.
நாடகம் என்பது
நாடகம் என்பது யாதெனில் தன்னகத்தே பல கலைகளை கொண்டமைந்ததாகும். அதாவது நாட்டின் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் வருங்காலத்தையும் தன்னகத்தே காட்டுவதனால் நாடகம் என பெயர் பெற்றது.
மேலும் நாடகமானது கதையை, நிகழ்ச்சியை, உணர்வை நடித்துக் காட்டும் கூத்தாக திகழ்வதோடு கூத்துக்கலை எனவும் அழைக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் நாடகக்கலையானது பல்வேறு தொழில் நுட்ப முன்னேற்றங்களை கொண்டே வளர்ந்து வருகின்றது.
நாடகக்கலையின் தோற்றமும், வளர்ச்சியும்
நாடகக்கலையானது தமிழின் தொன்மையானதொரு கலை வடிவமாக காணப்படுகின்றது என்ற வகையில் மனிதனானவன் பிறர் செய்வதைப் போல் தாமும் செய்து பார்க்க வேண்டும் என்ற உணர்ச்சிதான் நாடகக்கலை தோற்றம் பெற காரணமாகியது.
உயிரற்ற பொருட்களை வைத்து விளையாடிய விளையாட்டானது பிற்பட்ட காலங்களில் வளர்ச்சியடைந்து மனிதர்களுடனே வேடம் புனையச் செய்து ஆடிப் பாடி நடிக்க வைத்தது.
ஆரம்ப காலங்களில் பாவைக் கூத்தாக வளர்ச்சியடைந்த நாடகக்கலையானது பின்னர் நாட்டிய நாடகமாகி இன்று நாம் காணும் நாடகமாக வளர்ச்சியடைந்து வந்துள்ளது.
நாடகக்கலையின் சிறப்புக்கள்
கலைகளில் ஒன்றாக நாடகக்கலையானது திகழ்கின்றது. ஓர் கலைஞனானவன் மக்களில் நலன் கருதியே செயற்படுவான். அதாவது நாடகத்தை பார்ப்பவரது மனதில் புதுமைக் கருத்துக்கள் மற்றும் மறுமலர்ச்சிக் கருத்துக்களை தோற்றுவிக்கின்றது.
மேலும் உயர்ந்த எண்ணங்கள், உயிர்களிடத்தில் அன்பு, தெய்வ பக்தி என பல நல்லெண்ணங்களை நாடகத்தின் வாயிலாக அறிய முடிகின்றமையானது நாடகக்கலையின் சிறப்பினை எடுத்தியம்புகின்றது.
இலக்கியங்களில் நாடகக்கலை
தொல்காப்பிய மெய்பாட்டியல் நாடகப் பாங்கிலான உணர்வுகளுக்கு இலக்கணம் வகுப்பதாக காணப்படுகின்றன.
அதாவது சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் நாடகமேத்தும் நாடகக் கணிகை என்று மாதவியை குறிப்பிடுவதானது இலக்கியங்களில் நாடகக்கலையின் வளர்ச்சியை எடுத்தியம்புகின்றன.
மேலும் தனிப்பாடல்களில் மெய்ப்பாடு தோன்ற ஆடுவதனை நாட்டியம் என்றும் ஒரு கதையை தழுவி ஆடுதலை நாடகம் எனவும் இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகின்றது. அதேபோன்று நாடகம், நாட்டியம் ஆகிய இரு சொல்லிற்கும் பொதுவாக கூத்து என்ற சொல்லே வழக்கில் இருந்து வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
முடிவுரை
இன்று வளர்ந்து வரும் சினிமா துறையில் பிரதான இடத்தினை பிடித்துள்ளது நாடகக்கலையே ஆகும் என்பதோடு மக்களின் வாழ்வியலை உணர்வு பூர்வமாக எடுத்தியம்பக் கூடியதொரு கலையாகவும், இன்று வரை மக்களால் விரும்பப்பட கூடிய ஒன்றாகவும் இத்தகைய நாடகக்கலை காணப்படுவதானது சிறப்பிற்குரியதாகும்.
You May Also Like:
இந்தியாவின் பழமையான பல்கலைக்கழகம்